யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில்
மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
எல்லாம் அதிசயமே!
நிகழ்வு
ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜோசப்பிடம், அவரோடு பணியாற்றி வந்த மலர் என்பவர், “அக்டோபர் பன்னிரண்டாம் நாள் உங்களுக்கு நல்லது நடக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனார். மலர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, பெரிதும் மகிழ்ந்த ஜோசப் அக்டோபர் பன்னிரண்டாம் நாளுக்காகக் காத்திருந்தார்.
அக்டோபர் பன்னிரண்டாம் நாளும் வந்தது. ‘இன்றைக்கு எனக்கு நல்லது நடக்கப் போகிறது’ என்று மிக ஆவலோடு இருந்தார் ஜோசப்; ஆனால், எல்லா நாள்களையும் போல் அந்த நாள் வழக்கம் போல் கடந்தது. இரவு பன்னிரண்டு மணியானது. அப்பொழுதும்கூட ஜோசப்பிற்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. இதனால் அவர், மலர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று மிகவும் வேதனை அடைந்தார்.
மறுநாள் காலையில் ஜோசப் சற்று வருத்ததோடுதான் அலுவலகத்திற்குச் சென்றார். அவரிடம் வந்த மலர், “நேற்றைய நாளில் உங்களுக்கு நல்லது நடந்ததா?” என்றார். “எங்கே நடந்தது? எல்லா நாள்களையும் போல்தான் சென்றது” என்று சற்று வெறுப்போடு சொன்னார் ஜோசப். “அப்படியா!” என்று கேட்டுவிட்டு மலர் அவரிடம், “ஜோசப்! நான் கேட்கின்றேன் என்று என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நேற்றைய நாளில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதா?” என்றார். “இல்லயே! நான் நன்றாகத்தானே இருந்தேன்” என்ற ஜோசப்பிடம், மலர் மீண்டுமாக, “நேற்றைய நாளில் உங்களுக்கு ஏதாவது விபத்து நடந்ததா?” என்றார். “அப்படி எதுவும் நடக்கவில்லையே!” என்று சொல்லிமுடித்த ஜோசப்பிடம், “நேற்றைய நாளில் உங்களுடைய வீட்டில் எதுவும் திருடு போனதா?” என்றார் மலர். “என்னுடைய வீட்டில் எதுவும் திருடு போகவில்லை; எல்லாமும் பத்திரமாகத்தான் இருக்கின்றது” என்று சொல்லி முடித்தார் ஜோசப்.
அப்பொழுது மலர் அவரிடம் தொடர்ந்து பேசினார்: “நேற்றைய நாளில் உங்களுடைய உடல்நிலை நன்றாக இருந்தது என்று சொல்கின்றீர்கள்… எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை சொல்கிறீர்கள்… வீட்டில் எதுவம் களவுபோகவில்லை; எல்லாமே பத்திரமாகத்தான் இருக்கின்றது என்றும் சொல்கின்றீர்கள்! இவையெல்லாம் உங்களுக்கு நல்லதாகத் தெரியவில்லையா…?” மலர் இவ்வாறு சொன்னபிறகுதான் ஜோசப் ‘ஒவ்வொருநாளும் எவ்வளவோ நல்லது நடக்கின்றபொழுது, நான் அதை உணராதவனாக இருக்கின்றானே!” என்று யோசிக்கத் தொடங்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஜோசப்பைப் போன்றுதான் இன்று பலர் தங்களுடைய வாழ்வில் எவ்வளவோ நல்லது நடக்கின்றபொழுது, அதிசயங்கள் நடக்கின்றபொழுது, அதை உணர்ந்துகொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள். இயேசு மக்கள் நடுவில் பல்வேறு அருமடையாளங்களைச் செய்தார். அப்படியிருந்தும் மக்கள் அவரை இறைமகன் என ஏற்றுக்கொள்ளாமல், அவரிடம் அடையாளம் கேட்கின்றார்கள். மக்கள் அடையாளம் கேட்டபொழுது, இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அடையாளம் கேட்பது ஆண்டவரைச் சோதிப்பதற்குச் சமம்
இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கிய இயேசு மக்கள் நடுவில் பல்வேறு வல்ல செயல்களையும் அருமடையளங்களையும் செய்தார். இவற்றையெல்லாம் கண்டு மக்கள், இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், அவரை நம்பாமல், அவரிடம் அடையாளம் கேட்கின்றார்கள். மக்கள் கேட்ட அடையாளம் என்பது சாதாரண அடையாளம் அல்ல. யோர்தான் ஆற்றை இரண்டாகப் பிரிப்பது; விண்ணிலிருந்து விண்மீன் விழச் செய்வது மாதிரியான அடையாளம். இயேசு பல்வறு அருமடையாங்களையும் வல்ல செயல்களையும் செய்திருக்க, மக்கள் அவரிடம் அடையாளம் ஒன்றைக் காட்டும் என்று சொன்னபொழுதுதான், இயேசு, “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்” என்று அவர்களைச் சாடுகின்றார். ஏனெனில், திருவிவிலியத்தில் அடையாளம் கேட்பது ஆண்டவரைச் சோதிப்பதற்குச் சமமாகும் (விப 17:1-7)
யோனாவின் அடையாளத்தைத் தரும் இயேசு
மக்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டபொழுது இயேசு அவர்களிடம், “யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது” என்கின்றார். காரணம், யோனா அசிரியர்களின் தலைநகரான நினிவேயில் கடவுளின் வார்த்தையை அறிவித்ததும், அவர்கள் சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனம்மாறத் தொடங்கினார்கள். இயேசு யோனாவைவிடப் பெரியவர். அப்படியிருந்தும் அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் மனம்மாறவில்லை. அதனால்தான் இயேசு, “தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்” என்கின்றார்.
ஆம், யோனாவைப் பெரியவரான இயேசு மக்கள் நடுவில் பல்வேறு வல்ல செயல்களைச் செய்தும், மக்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும், மனம் மாறாமலும் இருந்தார்கள். நாமும்கூட கடவுளின் வல்ல செயல்களை நம்முடைய வாழ்வில் உணர்ந்தபொழுதும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும், மனம்மாறாமலும் இருக்கின்றோம். எனவே, ஆண்டவர் புரியம் அற்புதங்களை, அருமடையாளங்களை நம்முடைய வாழ்வில் உணர்ந்தவர்களாய், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.
சிந்தனை
‘அவர் அஞ்சுதற்கு உரியவர்; மிகப் பெரியவர்; அவருடைய வலிமை வியப்புரியது’ (சீஞா 43: 29) என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆகையால், மிகப்பெரியவரான ஆண்டவர் ஒவ்வொரு நாளும் செய்யும் வல்ல செயல்களை நம்முடைய வாழ்வில் உணர்ந்தவர்களாய், அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed