மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8
அக்காலத்தில்
இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மறையுரைச் சிந்தனை (ஜூலை 02)
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு…
கரடு முரடான மலைப்பாதை. அதில் இளைஞன் ஒருவனுக்கு, இரவில் பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம். அப்படி அந்த இளைஞன் செல்லும்போது, திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம், அவனை பெரிய பாதிப்புக்குள்ளாகியது.
“அம்மா” என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன், மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக் கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும் வேட்டையாடும் புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும், மண்ணின் மீதும் விரல்களை வைத்து பதித்துக்கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன் செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக கடைசியாக அவனுக்கு கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் வானம் வரை சென்று திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில். .எங்கிருக்கிறோம், என்னவாகப் போகிறோம் என்று யோசித்துப்பார்க்கவே முடியாத அளவுக்கு மனதிற்கும் கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு. திக்…திக்…திக்… இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.
மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின் துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன். மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில். காப்பாற்றுவார் யாருமில்லையா? “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, “மனிதா பயப்படாதே…நான் உன்னை காப்பாற்றுகிறேன். நீ பற்றியிருக்கும் மரக்கிளையை விட்டுவிடு”. கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம். அதிகப் பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்…. இப்படியும் அப்படியுமாக இரவை விரட்டிக்கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை பூமியில் பதிக்க தொடங்கியதும்… முக்கால் மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என, கீழே பார்த்தவனுக்கு பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி. ஆம் அவன் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு முழமே இடைவெளி.
விடிந்தது பொழுது மட்டுமல்ல. அவனின் உள்ளத்தின் நம்பிக்கையும்தான். அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும், தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி மனம் நொந்து தன்மீது தானே சினம் கொண்டான்.
எதன்மீதும் யார்மீதும் நம்பிக்கையில்லாமல் அவநம்பிக்கையோடு நிலை எத்துணை பரிதாபமானது என்பதை விளக்கிச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, நம்பிக்கையினால் நலம் பெற்ற ஒருவரைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. நம்பிக்கை ஒருவருக்கு எத்தகைய ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தருகின்றது என்று இப்போது பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சொந்த ஊருக்கு வருகின்றார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர் கட்டிலில் கிடத்தி, இயேசுவுக்கு முன்பாகக் கொண்டுவருகிறார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, அந்த முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார். மத்தேயு நற்செய்தியில் முடக்குவாதமுற்றவரை கட்டிலில் கிடத்தி எப்படிக் கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படாவிட்டாலும் ஒத்தமை நற்செய்தி நூல்களில் ஒன்றான மாற்கு நற்செய்தியில் இது குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இயேசு தன் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் போதித்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய போதனையைக் கேட்க ஏராளமான பேர் திரண்டு வருகிறார்கள். இதனால் முடக்கமுற்றவரைச் சுமந்துகொண்டு வரக்கூடியவர்கள், இயேசு இருந்த வீட்டின்மீது திறப்பு உண்டாக்கி, அதன்வழியாக முடக்குவாதமுற்றவரைக் கீழே இறக்குகிறார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு அவருக்கு நலமளிக்கின்றார். நற்செய்தியின் ஒருசில இடங்களில் இயேசு மக்களுடைய அவ நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும், இன்னும் ஒருசில இடங்களில் ஒருசில மனிதர்களிடமிருந்த நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்படத்தான் செய்கிறார். நூற்றுவத் தலைவர் இதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில் முடக்குவாத முற்றவரைச் சுமந்துகொண்டு வந்தவர்களின் நம்பிக்கையும் இயேசுவை வியப்பில் ஆழ்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
முடக்குவாதமுற்றவரைச் சுமந்து கொண்டு வந்தவர்களிடம் இருந்த நம்பிக்கை நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் இறைவனிடத்திலும் நம்மோடு வாழ்பவர்களிடத்திலும் ஏன் நம்மிடத்திலும் கூட நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றோம். இத்தகைய நிலையை மாற்றி நாம் நம்பிக்கையோடு வாழ்வது சிறப்பானது.
ஆகவே, இயேசுவிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed