நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
மறையுரைச் சிந்தனை –
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக வெளிநாட்டிலிருந்து இராணுவப்படை ஒன்று இங்கு வந்து இறங்கியது. இராணுவப் படையிலிருந்த வீரர்கள் வாரம் முழுவதும் எங்கெல்லாமோ சுற்றி அலைந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆனதும் ஆலயத்தில் நடைபெறக்கூடிய வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டார்கள்.
இதைக்கூர்ந்து கவனித்து வந்த ஒரு இந்துமத சகோதரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாமோ ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டுவிட்டு வருகிறோம். ஆனால் இவர்களோ ஞாயிற்றுக்கிழமைதான் ஆலயத்திற்குப் போகிறார்கள், அதுவும் ஒருசில மணிநேரங்களிலே ஆலயத்தைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்களைப் பார்த்தால் உண்மையில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்போல தெரியவில்லையே என்று வியந்துநின்றார்.
ஒரு சமயம் அந்த இந்துமத சகோதர் இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஏராளமான மக்கள் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டு பறிதவித்தார்கள். ஒருசிலர் தங்களுடைய வீடுகளையும், உற்றார் உறவினர்களை இழந்து தவித்தார்கள். அப்போது இந்த இராணுவ வீரர்கள்தான் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை வெளியே கொண்டுவந்தனர். வீடுகளையும், உற்றார், உறவினர்களையும் இழந்து தவித்தோருக்கு தாங்கள் இருந்த முகாமில் இடமளித்து, அவர்களுக்கு பலநாட்கள் உணவளித்து வந்தார்கள்.
இதைப்பார்த்த அந்த இந்துமத சகோதரர் ‘இவர்கள் அல்லவா உண்மையான கிறிஸ்தவர்கள்/ இறைபக்தர்கள். இவர்களைப் போன்று நானும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு கிறிஸ்தவராக வாழவேண்டும்’ என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வு சாரமுள்ள, அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு உப்பைப் போன்று சுவையூட்டக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதே இயேசு கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.
ரோமானியர்கள் தங்களுடைய வாழ்வில் உப்பை மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாகக் கருதினார்கள். இன்றியமையாத மனிதர்களை “உப்புக் கல்லைப் போன்றவர்கள்” என்றே அழைத்தார்கள். ரோம் நகரில் இன்றைக்கும் முக்கியமான ஒரு சாலையை “Via Salaria – The Salt Route” என்றே அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு உப்பைப் போன்று முக்கியமானவர்கள். நமது இருப்பு இந்த உலகிற்கு பயன்தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
அடுத்ததாக உப்பு தூய்மைக்கு அடையாளமாக இருக்கின்றது. நமது வாழ்வும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “நீங்கள் தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராய் இருக்கிறேன்” என்று. ஆகவே, நமது வாழ்வை தூய வாழ்வாக அமைத்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு நாம் கெட்டுச் சீரழிந்து போவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மத்தியில் நாம் தூயவராக வாழ்வதுதான் சவால் நிறைந்த ஒரு காரியமாகும்.
நிறைவாக உப்பு பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்க உதவுகிறது. உணவுப் பொருட்களை மட்டுமல்லாது, இறந்த மனிதர்களுடைய உடலையும் நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதற்கும் உப்பு பயன்படுகின்றது. உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த சமூகத்தை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும்.
இந்த உலகம் பணத்திற்கும், இன, சாதிவெறிக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இதனை அழிந்துபோகாமல் மீட்டெடுப்பதுதான் நமது கடமையாகும்.
எனவே உலகிற்கு உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த உலகில் நமது இருப்பு மிக முக்கியமானது என்பதை உணர்வோம், உப்பைப்போல தூய்மையான வாழ்வு வாழ்வோம், இந்த உலகை அழிவிலிருந்து மீட்போம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed