உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்
இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
திருத்தூதர்களான தூய பேதுரு, பவுல் பெருவிழா (ஜூன் 29)
நிகழ்வு
பேதுருவைக் குறித்து சொல்லப்படுகின்ற ஒரு தொன்மம். உரோமையை ஆண்ட நீரோ மன்னன் திருச்சபையின் தலைவரான பேதுருவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினான். இதையறிந்த கிறிஸ்தவர்கள் பேதுருவை எப்படியாவது உரோமை நகரைவிட்டு தப்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பேதுருவும் அரை மனதாக உரோமை நகரைவிட்டு தப்பித்து வெளியே போய்க்கொண்டிருந்தார். அவர் போகும்வழியில் இயேசு எதிரே வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பேதுரு, “ஆண்டவரே! நீர் எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நான் உரோமை நகரில் மீண்டுமாக கொல்லப்படப் போகிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம், பேதுரு வெளியே தப்பித்துப் போகும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உரோமை நகருக்குச் சென்று, அங்கேயே மறைசாட்சியாக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.
இன்று திருச்சபையானது திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. முதலில் இவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு, அதன்பிறகு இவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன என சிந்தித்து நிறைவுசெய்வோம்.
வாழ்க்கை வரலாறு
பேதுரு கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். இவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது ஆண்டவர் இயேசு இவரிடம் “என் பின்னே வா நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்” (மத் 4: 18-21) என்று சொல்லி அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசுவின் சீடர்கள் குலாமில் சேர்ந்த பேதுரு, அவருடைய மூன்று முதன்மைச் சீடர்களில் ஒருவராக மாறுகின்றார். குறிப்பாக இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளை உயிர்ப்பித்தல், கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியத்தல் போன்ற நிகழ்வுகளில் இவர் இயேசுவோடு உடனிருக்கிறார்.
ஆண்டவர் இயேசு சீடர்களிடத்தில் “நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கும்போது பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத் 16:16) என்று சொன்னதினால் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, எல்லா அதிகாரங்களையும் அவருக்குக் கொடுக்கின்றார். இயேசு தன்னுடைய உயிர்ப்புக்கு பிறகு, அவருக்குத் தோன்றியபோது, “என் ஆடுகளை மேய்” என்று சொல்லி அதனை உறுதிசெய்கிறார் (யோவா 21: 15-18).
பேதுருவைப் பொறுத்தளவில் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளமாக இருக்கின்றார். அவசரப்பட்டு ஏதாவது பேசுவார். பின்னர் அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த பேதுருதான் பின்னாளில், “ஆண்டவரே உம்மைப் பின்பற்றிவந்த எங்களுக்கு என்ன கியிக்கும்?” என்று கேட்பார். “எல்லாரும் உம்மைவிட்டுப் போனாலும் நான் உம்மைவிட்டுப் போகமாட்டேன்” என்று சொன்னவர், பிறகு இயேசுவை மூன்றுமுறை காட்டிக்கொடுப்பார். எனக்கு எதிராகத் தீங்கு செய்யும் என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழுமுறையா?” என்று கேட்டவர் படைவீரனாகிய மால்கு இயேசுவைக் கைதுசெய்ய வரும்போது, அவருடைய காதைத் துண்டிப்பார். இப்படியாக அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார். இருந்தாலும் அவர் இயேசுவின்மீது அளவு கடந்த அன்புகொண்டிருந்தார், அவருக்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து புரிந்த பணிகள் ஏராளம். மத்தியாசை திருத்தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு பேதுருதான் முன்னின்று செயலாற்றினார். பெந்தகோஸ்தே நாளில் பேதுருதான் சீடர்களின் சார்பாக இருந்து பேசுகின்றார். அதேபோன்று புறவினத்தாரிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை அறிந்து, அவர்களையும் இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கு பேதுருதான் காரண கர்த்தாவாக இருக்கின்றார் (திப 10: 34- 43). பேதுருதான் திருத்தூதர்களில் முதன்முறையாக இயேசுவின் பெயரால் புதுமையை ஆற்றியவர் (திப 3: 1-9). இவ்வாறாக பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, சீடர்களை ஒருங்கிணைத்தும் இறைமக்கள் கூட்டத்தை வழிநடத்தியும் சிறப்பான ஒரு பணியைச் செய்தார்.
பேதுரு தொடக்கத்தில் அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணி செய்தார். அதன்பிறகு அவர் உரோமை நகருக்குச் சென்று, அங்கே நற்செய்திப் பணியை ஆற்றி வந்தார். அப்போதுதான் நீரோ மன்னன் பேதுருவைப் பிடித்து சிறையில் அடைத்து, அவரைச் சித்ரவதை செய்தான். இறுதியாக அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறாக பேதுரு, இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பினால் அவருக்காகத் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி.64.
தூய பவுல்
சவுல் எனப்படும் பவுல் தர்சீஸ் நகரைச் சேர்ந்தவர்; பெஞ்சமின் குலத்தில் பிறந்தவர். இவர் கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்று, யூத சமயத்தில் மிக உறுதியாக இருந்த ஒரு பரிசேயராக விளங்கினார். அப்போதுதான் இவர் கிறிஸ்தவம் என்ற புதிய நெறியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அது யூத சமயத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து, அம்மதத்தைப் பின்பற்றுவோரை அழித்தொழிக்க நினைத்தார். அதற்காக அவர் எருசலேமிலிருந்து ஆணையை வாங்கிக்கொண்டு தமஸ்கு நகர் வழியாகக் குதிரையில் வந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் வானத்திலிருந்து தோன்றிய ஒளி அவரை நிலைகுலையச் செய்தது. அதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். “சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்” என்று வானத்திலிருந்து குரல் ஒலித்தது. அதற்கு அவர், “ஆண்டவரே! நீர் யார்?” எனக் கேட்க, “நீ துன்புறுத்தும் இயேசு நானே” என அந்தக் குரல் பதிலளித்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சவுல் பவுலாகின்றார். அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆனார்.
எந்த மதத்தைக் கூண்டோடு அழிக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த மதத்திற்காக பவுல் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். நற்செய்தி அறிவிப்பிற்காக பவுல் மேற்கொண்ட மூன்று திருத்தூது பயணங்கள் மிகவும் முக்கியமானவை. அதைவிடவும் அவர் நமக்கு வழங்கிவிட்டுச் சென்ற பதிமூன்று திருமுகங்கள் மிகவும் முக்கியமானவை. இத்திருமுகங்களைப் படித்துப் பார்க்கும்போது பவுல் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு அன்பும் பற்றும் கொண்டிருந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம். “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” என்று சொல்லி அவர் மறு கிறிஸ்துவாக மாறிவிடுகின்றார் (கலா 2:20).
“பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்” (2 கொரி 11: 24- 27) என்று பவுல் சொல்வதன் வழியாக அவர் கிறிஸ்துவுக்காக பட்ட பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம். இப்படியாக ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்து, அதற்காக துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்த புறவினத்தாரின் திருத்தூதராக பவுல் 67 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பேதுரு மற்றும் பவுலின் வாழக்கை வரலாற்றைக் குறித்து வாசித்த நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் தருதல்
பேதுருவும் பவுலும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவில் ஒன்றிணைந்து வந்தார்கள்; அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் தர, ஏன் தங்களுடைய உயிரையும் தர முன்வந்தார்கள். இந்த இருவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவர்களைப் போன்று இயேசுவுக்காக நம்மையே முழுவதுமாய் தர முன்வருகிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.
ஒருசமயம் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், அவ்வாறு கடலில் மூழ்கும்போது எப்போதோ கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் கண்டுபிடித்தார்கள். அதிலிருந்து அவர்கள் நிறைய விலை உயர்ந்த பொருட்களை கண்டெடுத்தார்கள். அதில் ஒன்றுதான் வைரத்தால் ஆன மோதிரம். அந்த மோதிரத்தில் ஒரு கையானது இதயத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று இருந்தது. அதற்குக் கீழே “ I have nothing more to give you” ( என்னுடைய இதயத்தைத் தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மோதிரம் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த மிக உன்னத பரிசைத் தருவது போன்று இருக்கின்றது. பேதுருவும் பவுலும் தங்களுடைய உயிரையே தந்து, இயேசுவின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நாமும் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிபடுத்த நமது உயிரைத் தரமுன்வரவேண்டும்.
Source: New feed