நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில்
இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
மறையுரைச் சிந்தனை (ஜூன் 26)
வறியோரிடம் பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ்வோம்
1853 ஆம் ஆண்டிலிருந்து 1856 வரை பிரிட்டனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கிரிமியன் (Crimean) என்னும் போர் மிகக் கடுமையாக நடைபெற்றது. இந்தப் போரில் ஏராளமான பேர் கொல்லப்பட்டார்கள், நிறையப் பேர் படுகாயமடைந்தார்கள். போரில் காயப்பட்ட படைவீரர்கள் அனைவரும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்கள். அப்படி போரில் காயபப்பட்ட படைவீரர்களுக்கு மத்தியில் பணியாற்றிய செவிலியர்களில் மிகவும் முக்கியமானவர் ப்லோரேன்ஸ் நைடிங்கில் என்பவர்.
ஒருநாள் இரவுவேளையில் நைடிங்கில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது படைவீரர்களில் யாரோ ஒருவர் வலியால் அலறுகின்ற சத்தம் கேட்டு, சத்தம் வந்த திசையை நோக்கிப் போனார். அங்கே போரின்போது காலில் சரியான காயம்பட்ட படைவீரர் ஒருவர் வலிதாங்காமல் படுக்கையில் அங்கும் இங்கும் உருண்டுகொண்டிருந்தார். உடனே நைடிங்கில் மருந்தகத்திற்குச் சென்று, தேவையாக மருந்தை எடுத்து வந்து, அதனை காயம்பட்ட படைவீரரின் காலில் நன்றாகத் தடவினார். மருந்து தடவப்பட்டதும் வலி குறைந்ததை உணர்ந்த அந்த படைவீரர் நைடிங்கிலிடம், “அம்மா நீங்கள்தான் கடவுளா” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் ஒன்றும் கடவுள் இல்லை, கடவுளுடைய பணியாளர்” என்றார்.
வறியவர் அல்லது தேவையில் இருக்கின்ற ஒருவரது தேவையை நிவர்த்தி செய்கின்ற யாவருமே கடவுள்தான் – கடவுளுடைய பணியாளர்தான் – என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மலையிலிருந்து போதித்துவிட்டு கீழே இறங்கிவருகின்றார். அப்போது தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்கிறார். ஆண்டவர் இயேசு தொழுநோயாளரை எப்படி குணப்படுத்தினார் என்று பார்ப்பதற்கு முன்பாக யூத சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை என்னவென்று பார்க்கவேண்டும்.
லேவியர் புத்தகம் 13 ஆம் அதிகாரம் யூத சமூகத்தில் தொழுநோயாளரின் நிலை எப்படி இருந்தது என்பதை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவர்கள் ஊருக்கு வெளியேதான் வாழவேண்டும், யாராவது அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து செல்ல நேர்ந்தால் ‘தீட்டு’ ‘தீட்டு’ என்று கத்தவேண்டும். ஏனென்றால் தொழுநோயாளர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். இப்படிப்பட்ட ஒரு கொடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் தொழுநோயாளர்கள். யூத வரலாற்று ஆசிரியரான ஜோசேபுஸ் என்பவர், தொழுநோயாளர்களை யூதர்கள் செத்த பிணத்திற்கு சமமாகப் பார்த்தார்கள் என்று கூறுவார். ஆக, இப்படியோர் கொடிய வாழ்க்கை வாழ்ந்து வந்த தொழுநோயாளர்களில் ஒருவரைத் தான் ஆண்டவர் இயேசு சந்திக்கின்றார்.
இயேசுவிடம் வந்த தொழுநோயாளரிடம் இருந்த நல்ல பண்புகள் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அவர் இயேசுவிடம் மிகவும் நம்பிக்கையோடு வருகின்றார். நான் ஆண்டவர் இயேசுவிடம் சென்றால் நிச்சயம் குணம் பெறுவேன் என்ற நம்பிக்கையோடு வருகின்றார். அது மட்டுமல்லாமல், அவர் இயேசுவிடம் மிகுந்த தாழ்ச்சியோடு வருகின்றார். தொழுநோயாளர் இயேசுவைப் பணிந்தார் என்று நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். பணிவு எங்கிருக்கின்றதோ அங்கே பரமனின் அன்பும் ஆசிரும் அதிகம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரியாய் சான்றாக இருக்கின்றது.
இப்படி பணிவோடும் நம்பிக்கையோடும் வந்த தொழுநோயாளரைத்தான் ஆண்டவர் இயேசு மரபுகளைக் கடந்து குணப்படுத்துகின்றார். ஆம், தொழுநோயாளர் என்றாலே அலறியடித்துக்கொண்டு ஓடும் மக்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசு அவர்மீது பரிவுகொண்டு அவரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். இங்குதான் இயேசுவின் பரிவை நாம் கண்டுகொள்ளவேண்டும். எல்லாருமே ஒதுக்கி வைத்த ஒருவரை இயேசு தொட்டுக் குணப்படுத்தினார் என்பது எத்துணை சிறப்பான ஒரு காரியமாகும்.
இயேசு தொழுநோயாளரைக் குணப்படுத்திய பிறகு செய்த இரண்டு காரியங்கள் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இயேசு அவரைக் குணப்படுத்தியவுடன், தன்னைக் குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்கிறார். காரணம் யூதர்களைப் பொறுத்தளவில் மெசியாவைக் குறித்த பார்வை தவறாக (அரசியல் மெசியா) இருந்தது. அதனால்தான் இயேசு அவரிடத்தில், அதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்கிறார். இயேசு சொன்ன இரண்டாவது காரியம், அவர் தொழுநோயாளரிடம், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்கிறார். இதன்வழியாக இயேசு தான் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர் என்பதை நிரூபிக்கின்றார்.
எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று வறியவர்களிடம் உண்மையான அன்போடும் இரக்கத்தோடும் இருப்போம். அதே வேளையில் தொழுநோயாளரைப் போன்று இறைவனிடத்தில் ஆழமான நம்பிக்கையோடும் உண்மையான தாழ்ச்சியும் கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed