நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
மறையுரைச் சிந்தனை (ஜூன் 15)
உங்கள் வலக்கன்னத்தில் அறைபவருக்கு இடக்கன்னத்தையும் காட்டுங்கள்
நகரப் பேருந்து ஒன்றில் தந்தையும் அவருடைய பத்து வயது மகனும் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். பேருந்தில் சரியான கூட்டம் என்பதால் இரண்டு பேரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள்.
ஓரிடத்தில் பேருந்து ஒரு குழியில் இறங்கி ஏறியபோது தந்தையானவர் நிலைதடுமாறி அருகே இருந்த நடத்துனர் மீது விழுந்துவிட்டார். அதற்காக அவர் நடத்துனரிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் நடத்துனரோ தொடர்ந்து அவரை வசைமாறிப் பொழிந்தார். எல்லாவற்றையும் தந்தையானவர் மிகவும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அவர்கள் இறங்கவேண்டிய இடம் வந்ததும் தந்தையும் மகனும் அந்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் வீட்டை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கும்போது மகன் தந்தையிடம் கேட்டான், “அப்பா! பேருந்தில் நீங்கள் அந்த நடத்துனரின்மீது விழுந்ததற்காக அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டுவிட்டீர்கள். அப்படியிருந்தும் அவர் தொடர்ந்து உங்களைத் திட்டுக்கொண்டே இருந்தாரே, பதிலுக்கு நீங்கள் அவரைத் திட்டியிருக்கலாமே, எதற்காக இவ்வளவு பொறுமையாக இருந்தீர்கள்?”. அதற்குத் தந்தை மிகவும் பொறுமையாக, “மகனே! அவர் என்னைத் திட்டியதற்காக பதிலுக்கு நான் அவரைத் திட்டினால் பிரச்சனை பெரிதாகுமே ஒழிய, அது முடிவுறுவதற்கு வழியே இராது. அது மட்டுமல்லாமல், ஒருநாளைக்கு அவர் மீது எத்தனைப் பயணிகள் விழுவார்கள்? அப்போது அவருக்கு எவ்வளவு கோபம் வரும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். அதனால் நான் அவரிடத்தில் ஒன்றுமே சொல்லாமல் இருந்தேன்” என்றார்.
தீமைக்குத் தீமை என்றால் இந்த உலகத்தில் யாரும் அமைதியாக இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்வு நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதிய போதனையைத் தருகின்றார். அதுதான் வலக்கன்னத்தில் அறைபவருக்கு இடக்கன்னத்தைக் காட்டுங்கள் என்பதாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கண்ணுக்குக் கண், பல்லுப் பல் என்ற சட்டம் இருந்தது. இத்தகைய சட்டத்தை யூதர்கள் பாபிலோனிய அரசன் ஹமுராபி (கிமு 2285- 2242) என்பவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். இந்தச் சட்டமும்கூட ஒருவிதத்தில் இனக்குழுகளிடையே நடைபெற்ற தீமைகளைக் குறைப்பதாக இருந்தது.
எப்படியென்றால் நாடோடிச் சமூகங்களாக வாழ்ந்த மக்கள், இனக் குழுக்களாக வாழ்ந்த மக்கள் ஒரு குழுவில் இருந்த மனிதர் ஒருவர் செய்த தவற்றிற்காக ஒட்டுமொத்த இனத்தையும் அழித்தார்கள். இத்தகைய சூழலில் ஹமுராபி கொண்டுவந்த சட்டத்தினால் ஒரு குழுவில் இருக்கின்ற ஒருவன் இன்னொரு குழுவில் இருக்கின்ற ஒருவனது பல்லை உடைத்தாலோ அல்லது கண்ணைப் பிடுங்கினாலோ பதிலுக்கு பாதிக்கப்பட்டவன் பாதிப்பை ஏற்படுத்தியவனுடைய கண்ணையோ அல்லது பல்லையோதான் பிடுங்க முடியும், அதுவும் தனியாளாக இதனைச் செய்யமுடியாது, இரு குழுக்களின் தலைவர்களுக்கு முன்பாகத்தான் செய்ய முடியும். அதற்கு மேலும் ஒன்றும் செய்யமுடியாது. அப்படிப் பார்க்கும்போது ஹமுராபியின் சட்டம் ஒருவிதத்தில் தீமைகளைக் குறைப்பதாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் ஆண்டவர் இயேசுவோ அதனிலும் உயர்ந்த கட்டளையைத் தருகின்றார். அதுதான் வலக் கன்னத்தில் அறைபவருக்கு இடக்கன்னத்தைக் காட்டுவது; அங்கியை எடுத்துகொள்ள விரும்புகிறவருக்கு மேலாடையைத் தருவது; ஒருகல் நடக்கக் கட்டாயப் படுத்துவோருக்கு இறுகல் தொலைவு நடப்பது; கேட்பவருக்குக் கொடுப்பது; முகங்கோணாமல் கடன்கொடுப்பது. இத்தகைய போதனை இந்த உலகில் யாரும் போதியாதது.
எடுத்துக்காட்டாக ஒருவர் எதிரே இருக்கின்ற இன்னொருவருடைய வலக்கன்னத்தில் அறையவேண்டுமாயின், கையைத் திருப்பிக் கொண்டுதான் அடிக்கவேண்டும். இப்படி அறைவாங்குவது மிகப்பெரிய அவமானச் செயலாகும். ஆனால் தன்னுடைய வழியில் நடக்கின்ற ஒருவர் அத்தகைய அவமானத்தைத் தாங்கிக்கொள்ளவேண்டும் என்கிறார் இயேசு அங்கியை எடுக்க நினைப்பவருக்கு மேலாடையைத் தருவதையும், ஒரு கல் நடக்கக் கட்டாயப்படுத்துவோருக்கு இரண்டு கல் தூரம் நடப்பதையும் அந்த விதத்தில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவர் நம்மை எந்தளவுக்கு கொடுமைப்படுத்தினாலும் அவரை எதிர்க்காமல் இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆழமான போதைனையாக இருக்கின்றது.
இப்படிச் செய்வதனால் நாம் கோழைகள் என்று நினைக்கத் தேவையில்லை. மாறாக இவற்றை தீமைக்கெதிரான மிகப்பெரிய ஆயுதமாக எடுத்துக்கொள்ளலாம். தீமை செய்பவர் பொறுத்துக்கொண்டிருக்கின்ற ஒருவரை எவ்வளவு நாளுக்குத்தான் கொடுமைப்படுத்துவார்?, அவர் நிச்சயம் ஒருநாள் மனம்மாறி தான் செய்வது அனைத்தும் குற்றம் என உணர்வார். இயேசுவிடமிருந்து எடுத்துக்கொண்ட காந்தியின் அஹிம்சா கொள்கைக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் எப்படி அடிபணிந்து நின்றார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
Source: New feed